Saturday, August 19, 2017

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய அறிவிப்புகள்:முதல்வர் எடப்பாடி பழனிசாமி


கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (விஏஓ) ஆறு புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.

கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை:
கிராம கர்ணம், கிராம முன்சீப் தேர்வில் 1980 -க்கு முன்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 2009 -ஆம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட 747 கிராம நிர்வாக அலுவலர்களின் பணி, தகுதியின் அடிப்படையில் விரைவில் வரன்முறை செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணக்குப் பராமரிப்பு, அலுவலகங்களைப் பராமரிப்புக்காக, ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்டு வரும் ரூ.2,500 பராமரிப்புச் செலவுக்கான தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தாலுக்கா அலுவலகங்களில் இணைய வழி பட்டா வழங்கும் திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள 254 கணினி பதிவேற்றுநர்களின் பணி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
வருவாய்த் துறையின் மூலமாக வழங்கப்படும் இணையதள சான்றிதழ்களின் பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், எல்காட் நிறுவனம் மூலம் இணையதள வசதி, எழுதுபொருள் செலவினம் ஆகியன அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அளிக்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர்களை நிர்வாக சாத்தியக்கூறுகள், வழிவகைகளுக்கு உட்பட்டு, அவர்களது சொந்த உள்வட்டம், வட்டத்தில் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் முதல்வர்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment